Saturday, June 02, 2018

Savukku காவியத் தலைவன் – 2 BY SAVUKKU · JUNE 2, 2018 கடந்த ஆண்டு, கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி எழுதிய கட்டுரை காவியத் தலைவன். தமிழக அரசியல் சூழலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் கருணாநிதி முழுமையான செயல்பாட்டோடு இல்லாத வெறுமை முகத்தில் அறைகிறது. அவரின் உடன்பிறப்புக்கான கடிதங்களும், பத்திரிக்கையாளர்களை சந்திக்கையில் அளிக்கும் அற்புதமான பதில்களும், எள்ளல்களும், எரிச்சல்களும், கோபங்களும், குத்தல்களும் இல்லாமல் காற்றே வெறுமையாக வீசுகிறது. கருணாநிதியை கடுமையாக விமர்சிப்பவர்கள் கூட, அவர் இல்லாமல் தமிழகத்தின் அரசியல் சூழலே சோர்ந்து போயுள்ளதை ஒப்புக் கொள்கிறார்கள். அவர் முழுமையான செயல்பாடுகளோடு இருந்தவரை, தமிழக அரசியல் கருணாநிதியை சுற்றியே அமைந்ததை எந்த அரசியல் விமர்சகரும் மறுக்க மாட்டார். அப்படியொரு காந்த சக்தியோடு அவர் இருந்தார். ஒரே நேரத்தில் இரு பெரும் ஆளுமைகளை தமிழகம் இழந்துள்ளது. ஒருவர் காலமாகி விட்டார். ஒருவர் முழுமையான அரசியலில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். பக்தவச்சலம், காமராஜர், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதாவோடு அரசியல் செய்த கருணாநிதி, எடப்பாடி பழனிச்சாமியோடு அரசியல் செய்யும் அவலம் நேரக் கூடாது என்று விரும்பியோ என்னவோ, காலம் அவரை கட்டிப் போட்டு விட்டது. அரசு என்ற பெயரில் எடப்பாடி பழனிச்சாமியும், பன்னீர் செல்வமும், அவர் அமைச்சரவை சகாக்களும் அடிக்கும் கூத்துக்களை அவர் பேனா எழுதுவதை காலமே விரும்பவில்லையோ என்னவோ …. அரசியலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதே ஒவ்வொரு அரசியல் கட்சித் தலைவனின் நோக்கமாக இருக்க வேண்டும். அந்த வெற்றியை அடையும் பாதையும் நேர்மையானதாக, சரியானதாக இருக்க வேண்டும் என்பது, காந்தியின் வழிமுறை. ஆனால், அந்த நேர்மையான வழிமுறையை காந்தி கையாண்டபோது, அந்த வழிமுறையை மதித்த ஒரு பிரிட்டிஷ் அரசாங்கம் இருந்தது. காந்தி உண்ணாவிரதம் இருந்தால், பிரிட்டிஷ் அரசு பதறியது. எப்படியாவது அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற வைக்க, காங்கிரஸ் தலைவர்களின் உதவியை நாடியது. இறுதியாக காந்தியின் கோரிக்கைகளை ஏற்கும் சூழலுக்கு தள்ளப்பட்டது. ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த உடனடியாகவே இந்த நேர்மை உணர்ச்சியை ஆட்சிக்கு வந்த இந்தியர்கள் துறந்தனர். பாகிஸ்தான் பிரிகையில் அதற்கு தருவதாக ஒப்புக் கொண்ட 130 கோடியை தரக் கூடாது என்று நேருவும், பட்டேலும் முடிவெடுத்தனர். ஆனால், காந்தி அதை எதிர்த்து, தன் சொந்த அரசாங்கத்தை எதிர்த்து உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் காந்திகள் அரசியலில் விதி விலக்குகள். அரசியலில் வெல்ல எல்லா வழிமுறைகளையும் கையாளத்தான் வேண்டும். இங்கே வெற்றி ஒன்றே மதிக்கப்படும். தோல்வியடைந்தவனுக்கு சாமரங்கள் வீசப்படுவதில்லை. கருணாநிதி இன்று எண்பது வயதுகளில் இருந்திருந்தால், இந்த ஆட்சியை முதல் பத்து நாட்களில் கவிழ்த்திருப்பார் என்பதில் எனக்கு துளியும் சந்தேகம் இல்லை. அப்படி கவிழ்ப்பது சரியா, தவறா என்பது அவசியமற்ற விவாதம். எடப்பாடி பழனிச்சாமி ஒரு வருட ஆட்சியை முடித்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு. எதிர்க்கட்சிகள் எல்லாவற்றுக்கும் அவமானம். எடப்பாடியின் ஆட்சி தமிழக வரலாற்றில் ஒரு கரும்புள்ளி. இந்த ஆட்சியை எந்த தந்திரத்தை பயன்படுத்தியும் கலைக்கலாம். கவிழ்க்கலாம். ஆட்சியை கவிழ்த்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வரலாம் என்பதையும் தாண்டி, எடப்பாடி, பன்னீர் செல்வம், வேலுமணி, தங்கமணி போன்ற பதர்களிடம் கிடைக்கும் அதிகாரம் எப்படிப்பட்ட பாரதூர விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை கருணாநிதி உணர்ந்திருப்பார். ஊழல் செய்யாத ஆட்சியை பார்க்க முடியாது. எதிர்ப்பார்க்கவும் கூடாது. நமது தேர்தல் முறைகள் அத்தகையன. ஒரு பாலம் கட்டினால் அதில் 20 சதவிகிதம் கமிஷன் பெறுவதை சகித்துக் கொள்ளலாம். ஜெயல்லிதா அதை 50 சதவிதமாக்கினார். ஆனால் எடப்பாடி அரசு, பாலமே கட்டாமல், 100 சதவிகிதத்தையும் ஸ்வாகா செய்யும் வேலைகளை கடந்த ஒரு ஆண்டாக செய்து கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட அரசாங்கத்தில் பணியாற்றும் அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் எத்தகைய ஊழல் பெருச்சாளிகளாக மாறிப் போயிருப்பார்கள் என்பதை ஊகித்துக் கொள்ளுங்கள். ஒரு அரசில், முதலமைச்சர் ஒரு தனி ஊழல் ராஜாங்கம். ஒவ்வொரு அமைச்சரும் ஒரு தனி ஊழல் ராஜாங்கம் நடத்தினால், எத்தனை ஆண்டுகளுக்கு இதன் தாக்கம், தமிழக நிர்வாகத்தில் புரையோடிப் போயிருக்கும் என்பதை யோசித்துப் பாருங்கள். இந்த ஊழல் அரசாங்கத்துக்கு ஒத்து ஊதும் ஊதுகுழலாக நீதிமன்றமும் மாறிப் போயுள்ளதுதான் வேதனை. 18 எம்எல்ஏக்கள் வழக்கில் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டு, 100 நாட்கள் கடந்த நிலையில், தீர்ப்பின் தாமதத்தை எடப்பாடி அரசு சட்டவிரோதமாக தொடர்ந்து நடைபெறுவதற்கு உதவுவதாகவே எடுத்துக் கொள்ள முடியும். நீதிபதிகள், அரசியலுக்கு அப்பாற்பட்டவர்கள்தான். ஆனால் அவர்கள் அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபடும்போதும், தீர்ப்புகளை தாமதமாக்கியோ, இழுத்தடித்தோ, மக்களுக்கு விரோதமாக செயல்படுகையில், அவர்களை இடித்துரைப்பது ஒரு அரசியல் தலைவரின் கடமை. சரியோ தவறோ. 18 எம்எல்ஏக்களின் வழக்கில் இத்தனை நாள் தாமதம் ஏன் என்ற கேள்வியை முக.ஸ்டாலின் வெளிப்படையாக எழுப்பியிருக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அவருக்கு அதற்கான எல்லா உரிமைகளும் உண்டு. ஆனால் 100 நாட்களைக் கடந்தும் அவர் கனத்த மவுனம் காக்கிறார். அவரின் இந்த மவுனம்தான், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இவ்வழக்கை 100 நாட்களுக்கு மேலாக தாமதம் செய்ய துணிச்சலை தருகிறது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தீர்ப்புளிக்க இன்னும் எத்தனை நாட்கள் நீதிமன்றம் எடுத்துக் கொள்ளும் என்று ஸ்டாலின் ஒரு கேள்வியை எழுப்பினால் உயர்நீதிமன்றம் அவரை தூக்கிலா போட்டு விட முடியும் ? அதிகபட்சம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பார்கள். அதை எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பெருமையோடு ஸ்டாலின் எதிர்கொள்ள வேண்டும். 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்ற சமயத்தில், ராஜீவ் கொலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் கருணை மனு தொடர்பான வழக்கில் தீர்ப்பு எப்போது என்பதை, தமிழகத்துக்கு வருகை தந்திருந்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் பத்திரிக்கையாளர்களை சந்தித்து கூறினார். அவரின் அந்த கருத்து, வெளிப்படையாக, ஜெயலலிதாவுக்கு தேர்தலில் உதவி செய்வதற்காகவே என்பது அப்பட்டமாக தெரிந்தது. சதாசிவம் தலைமை நீதிபதியானது கருணாநிதி போட்ட பிச்சை. அவர் இல்லையென்றால், சதாசிவம் ஒரு நாளும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாயிருக்க முடியாது. அடுத்த நாள் நடந்த தேர்தல் பொதுக் கூட்டத்தில் கருணாநிதி இப்படிப் பேசினார். “வரும் 24-ம் தேதி அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெற உள்ள சூழ்நிலையில் நீதியரசர் சதாசிவம் தான் ஓய்வு பெற உள்ள ஏப்ரல் 25-ம் தேதிக்குள் ஒரு முக்கியமான வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று கூறியிருப்பது அரசியல் ரீதியான விளைவினை தமிழகத்தில் ஏற்படுத்துமோ? என்ற ஐயம் பலருக்கும் எழுந்துள்ளதோடு, வழக்கறிஞர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது என்றும், முக்கியமான இந்த வழக்கின் தீர்ப்பு நாடாளுமன்ற தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் முன்பு வரும் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியே ஒரு பொது விழாவிலே அறிவித்திருப்பது எத்தகைய சாதக, பாதகங்களை ஏற்படுத்தும் கூடும் என்பதையும், அந்த அறிவிப்பு நீதிமன்ற மரபுகளுக்கு உகந்ததுதானா? என்பதையும் எண்ணிப்பார்த்து அதற்கேற்ப முடிவு செய்வது நீதிமன்ற நெறிகளை காப்பாற்ற பயன்படும் என்பதுடன், அனைவருக்கும் நலன் பயக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். சட்டம் படித்த நீதிபதிகள் எண்ணிப்பார்க்க வேண்டும். நீதிபதி எனக்கும் நண்பர் தான், தெரிந்தவர் தான். நீதிக்கு மதிப்பளித்து நீதி தராசு எல்லோருக்கும் சமம் என்று நினைத்துப் பார்க்க கூடிய நீதிபதி ஒருவர் இது போன்ற கருத்துகளை பொது விழாவில் கூறலாமா? மக்கள் இதனை எண்ணிப்பார்க்க வேண்டும்” ஆடிப்போனார் சதாசிவம். உடனடியாக மூவர் வழக்கை ஐந்து நபர் அமர்வுக்கு மாற்றியனுப்பினார். அதுதான் கருணாநிதி. நீதிபதிகள் நம்மிலிருந்து வருபவர்களே. அவர்கள் நீதிபதிக்கள் என்பதற்காகவே அவர்கள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. கடவுளையே விமர்சனத்துக்குள்ளாக்கும் தேசம் இது. நீதிபதிகளையும், நீதிமன்றங்களையும் எப்போது எப்படி விமர்சனத்துக்குள்ளாக்க வேண்டும் என்பதை நன்கு உணர்ந்தவர் கருணாநிதி. சதாசிவம் அதே சதாசிவம், கேரள மாநில ஆளுனரான சமயத்தில், முரசொலியில் கருணாநிதி, அது குறித்து, அவரே கேள்வி கேட்டு அவரே பதில் சொன்னார். “கேள்வி :- நீதிபதி சதாசிவம் அவர்கள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாகப் பொறுப் பேற்ற போது, வாழ்த்துத் தெரிவித்த தாங்கள், அவர் அண்மையில் கேரள மாநிலத்தின் ஆளுநராகப் பொறுப்பேற்ற போது வாழ்த்துத் தெரிவிக்கவில்லையே? பதில் :- இந்தக் கேள்விக்கு நான் பதில் அளிப்பதற்குப் பதிலாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்றுவிட்ட நீதிபதி கே. சந்துரு அவர்கள் “தி இந்து” தமிழ் நாளேட்டில் “நீதி மானே! இது நியாயமா?” என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதியைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். “உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மாநிலத்தின் ஆளுநர்களாக நியமிக்கக் கூடாதென்று 2005லேயே அன்றைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மா மத்திய அரசுக்குக் கடிதம் எழுதினார். பின்னர், 2008இல் அவர் அளித்த பேட்டி ஒன்றில், அப்படி நீதிபதிகள் ஆளுநராக நியமிக்கப் படுவது சந்தேகத்தை அளிக்கும் என்றும், தாங்கள் பதவியில் இருக்கும்போதே இது போன்ற பதவிகளுக்காக ஆசைப்பட்டு, நீதிபதிகள் தங்கள் சுதந்திரத்தை அடகு வைக்கும் நிலை ஏற்படுமென்றும் எச்சரித்தார். இது தவிர, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தங்கள் பதவிக் காலத்துக்குப் பிறகு எந்த நீதி மன்றத்திலும், எந்த அதிகாரிகள் முன்னாலும் ஆலோசனை சொல்லுவதோ வழக்காடுவதோ அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 124 (7)ன்கீழ் தடை செய்யப்பட்டுள்ளது. மற்ற பதவிகளைப் பற்றிக் குறிப்பிடாததாலேயே அவர்கள் மற்ற அரசுப் பணிகளில் அமரலாம் என்று அர்த்தப் படுத்திக் கொள்ளக் கூடாது. அதேபோன்று, அரசமைப்புச் சட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட பல பதவிகளை அலங்கரித்தவர்கள், ஓய்வு பெற்ற பின் மத்திய – மாநில அரசுகளின் கீழ் எவ்விதப் பதவியையும் வகிக்கக் கூடாதென்று விதிகள் உள்ளன. ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி சதாசிவம், கேரள மாநில ஆளுநராக நியமிக்கப்படுவதற்குச் சம்மதம் தெரிவித்து, அந்தப் பொறுப்பையும் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு அளிக்கப்பட்ட இந்தப் புதிய பொறுப்பு அவர் ஏற்கனவே நீதிபதியாக இருந்த போது செய்த உதவிக்குப் பரிசாக வழங்கப்பட்டுள்ளது என்ற குற்றச் சாட்டுகள் பரவலாக எழுப்பப்பட்டதையும், நாடு முழுவதும் நீதித் துறை மற்றும் சட்ட வல்லுநர்கள், அவர் பொறுப்பேற்றதற்குக் கண்டனக் கணைகளை எழுப்பியதையும் ஊடகங்களில் பார்த்தோம். ஆளுநர் பதவியில் சட்ட ஞானம் பயன்படும் என்பதை விட, மத்திய அரசின் அரசியல் தந்திரங் களைச் செயல்படுத்தும் முகவர்களாகவே ஆளுநர்கள் செயல்பட வேண்டும் என்பதை நீதிபதி சதாசிவம் புரிந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே வகித்த பதவியைவிட அரசமைப்புச் சட்டத்தில் நான்கு ஸ்தானங்கள் கவுரவக் குறைவாக உள்ள பதவியை ஏற்றுக் கொள்வதும், அதற்கு நியாயங்கள் கற்பிப்பதும் நீதிமான்களுக்கு அழகல்ல. முறையற்ற விதத்தில் பதவி ஒன்றை அலங்கரிப்பது தமிழராக இருந் தாலும் சரி, வேற்று மொழியைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, தவறான முன்னுதாரணம் என்பதில் அய்யப்பாடு ஏதுமில்லை” இப்படிப்பட்ட விமர்சனங்கள் எல்லாம் நீதிபதி சதாசிவம் அவர்களுக்குத் தேவையா என்பதுதான் சிலருடைய கருத்து.” இதுதான் கருணாநிதி. ஆட்சியை ஏன் கவிழ்க்கவில்லை என்று எழுப்பப்படும் கேள்விக்கு, ஸ்டாலினுக்கு நெருக்கமான தலைவர்கள், அரசியலில் குதிரை பேர கலாச்சாரத்தை தொடர்ந்து வளர்ப்பதை ஸ்டாலின் விரும்பவில்லை என்றார்கள். அப்படி நேர்மையான கலாச்சாரத்தை வளர்த்தெடுக்கும் அளவுக்கு தூய்மையான கட்சியா என்ன திமுக ? எடப்பாடி ஆட்சியை தொடர அனுமதிப்பன் மூலம், ஸ்டாலின் திமுகவுக்கு மட்டுமல்ல. தமிழக மக்களுக்கும் துரோகம் செய்கிறார் என்றே கருத வேண்டி உள்ளது. எடப்பாடி ஆட்சியை கவிழ்த்து, அவரை வீட்டுக்கு அனுப்பும் பணிக்காக, ஸ்டாலின், டிடிவி தினகரனோடு கைகோர்ப்பதில் கூட தவறில்லை. இது போன்ற காரணங்களினால்தான், கருணாநிதி, காலத்துக்கும் நிலைத்து நிற்கிறார். நெருக்கடியான நேரங்களில் சாதுர்யமான முடிவுகளை எடுப்பதில் கருணாநிதிக்கு நிகரே கிடையாது. நெருக்கடி நிலையின்போது திமுக தலைவர்கள் அடிபட்டனர். சிறை வைக்கப்பட்டனர். மிசா சட்டத்தில் அடைக்கப்பட்டனர். ஆனால் நெருக்கடி நிலை முடிந்ததும், எந்த இந்திரா காந்தி தன்னையும், தன் மகனையும், தன் கட்சித் தோழர்களையும் சிறையில் அடைத்தாரோ, அதே இந்திராவோடு கூட்டணி அமைத்து “நேருவின் மகளே வருக, நிலையான ஆட்சி தருக” என்றார். வெளிப் பார்வைக்கு இது அப்பட்டமான துரோகமாக தெரியும். ஆனால் இதை கருணாநிதியின் பார்வையில் இருந்து பாருங்கள். சர்க்காரியா ஆணையத்தின் முன் அளிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்களில், ஏழு அல்லது எட்டு குற்றச்சாட்டுகளை சர்க்காரியா நிரூபணம் ஆனது என்று அறிக்கை அளித்தார். அந்த குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் நிரூபிக்கத்தக்கவை. மிக மிக எளிதாக இந்திரா காந்தியால் கருணாநிதியை ஊழல் வழக்கில் சிறைக்கு அனுப்பி விட்டு, திமுகவை நிர்மூலமாக்கியிருக்க முடியும். எப்படியாவது தேர்தலில் வெல்ல வேண்டும் என்ற இந்திராவின் நெருக்கடியை புரிந்து கொண்டு, சாதுர்யமாக அவரோடு கூட்டணி அமைத்து, சர்க்காரியா ஆணைய விசாரணையிலிருந்து தப்பித்தார். அது சந்தர்ப்பவாதமா என்றால் ஆம். நியாயமற்ற செயலா என்றால் ஆம். ஆனால், திமுக இன்றும் இருக்கிறது. கருணாநிதி இன்றும் இருக்கிறார். இன்றைய தலைமுறைக்கு சர்க்காரியா ஊழல் புகார்கள் பற்றி என்ன தெரியும் அந்த சாதுர்யம்தான் கருணாநிதியை தமிழக அரசியலை 70 ஆண்டுகளாக தன்னைச் சுற்றியே சுழல வைத்தது. எண்பதுகளில் ராஜீவ் காந்திக்கு எதிராக அமைக்கப்பட்ட தேசிய முன்னணியாக இருக்கட்டும். பின்னர் அமைந்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணியாகட்டும். தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, கருணாநிதி என்ற பெயர்தான் உயர்ந்து நின்றது. விபி.சிங்கோடு சேர்ந்து போட்டியிட்ட அந்த நாடாளுமன்றத் தேர்தலில், தமிழகத்தில் திமுக ஒரு எம்பி சீட் கூட ஜெயிக்கவில்லை என்றாலும், திமுகவின் மாநிலங்களவை உறுப்பினர் முரசொலி மாறனை கேபினெட் அமைச்சராக்கினார் விபி.சிங். அது முரசொலி மாறனுக்கு கிடைத்த அங்கீகாரம் அல்ல. கருணாநிதிக்கு கிடைத்த மரியாதை. பின்னாளில் உருவாகிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் கருணாநிதி முக்கிய பங்கு வகித்தார். மாநிலத்தில் எப்படி ஒரு பெரும் தலைவராக இருந்தாரோ, அதே வேளையில் தேசிய அளவிலும் தனக்கான முக்கியத்துவம் குறையாமல் பார்த்துக் கொண்டார். தேசிய அளவில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை கூர்ந்து கவனித்து, அவற்றுக்கான எதிர்வினைகளை ஆற்றி, தான் மட்டுமல்லாமல், தன் தொண்டர்களையும் விழிப்போடு வைத்துக் கொண்டார். அவர் முழுமையான செயல்பாட்டோடு இன்று இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து மனம் ஏங்குவதை தவிர்க்க முடியவில்லை. தூத்துக்குடி போராட்டத்தில் காவல்துறையினரின் செயல்பாடுகளை நியாயப்படுத்தி பேசிய ரஜினிகாந்த் கருணாநிதியால் எப்படி விமர்சிக்கப்பட்டிருப்பார் என்பதை நினைத்து மனம் ஏங்குகிறது. “ரஜினிகாந்த் எனது சிறந்த நண்பர்” என்று தொடங்கி, ரஜினி அதை படித்துப் படித்து கதறி அழும் வகையில் அந்த விமர்சனம் அடங்கியிருக்கும். எடப்பாடி பழனிச்சாமி, தன்னை கடவுளாக உருவகித்து, அரசு செலவில் திரைப்படம் எடுத்து வெளியிட்டதை கருணாநிதி எப்படி ஏகடியம் செய்திருப்பார் என்பதை நினைத்தாலே மனம் மகிழ்கிறது. ஆனால், கருணாநிதி இன்று முழு செயல்பாடு இல்லாமல், ஓய்வு பெற்றிருப்பது எனக்கு ஒரு வகையில் மகிழ்ச்சியே. வாட்ஸப்பிலும், சமூக வலைத்தளங்களிலும் மட்டுமே தமிழகத்தின் நீண்ட வரலாற்றை படித்தறியும் இன்றைய தலைமுறைக்கு, கருணாநிதி யார் என்பது தெரியாது. உதயநிதிகளையும், ரவீந்திரநாத்களையும், சீமான்களையும், அவர்கள் செய்யும் கோமாளித்தனங்களையும் பார்க்கும் இன்றைய தலைமுறைக்கு கருணாநிதி எப்படிப்பட்ட மாபெரும் ஆளுமை என்பது புரியவே புரியாது. கருணாநிதி மீது எனக்கு இப்போதும் சரி, எப்போதும் சரி. ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனால், நான் பார்த்து, ரசித்து, நேசித்து, வியந்து, கோபப்பட்டு, வெறுத்து, பாராட்டி, திட்டி, விமர்சனம் செய்து, பகடி செய்து, என்று பல பரிமாணங்களில் எனக்கு நெருக்கமான தலைவர் கருணாநிதி. அவருக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள். குறிப்பு : கருணாநிதி பிறந்த நாளுக்காக கடந்த ஆண்டு மே மாதம் எழுதிய கட்டுரையில் இப்படி எழுதியிருந்தேன். நாற்பது ஆண்டு கால பொது வாழ்வுக்கு பிறகு கருணாநிதி மீது குடும்ப ஆதிக்கம் என்று வந்த குற்றச்சாட்டு ஸ்டாலின் மீது இப்போதே எழத் தொடங்கியுள்ளது. சபரீசனும், அன்பில் மகேஷும், உதயநிதியும் கட்சியில் பல முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் சொல்வதை மட்டுமே ஸ்டாலின் கேட்கிறார் என்று கட்சியினரே புகார் கூறுகிறார்கள். அரசியல் களத்தில் தன் தடத்தை வலுவாக பதிக்க வேண்டிய ஸ்டாலினின் வளர்ச்சிக்கு இது போன்ற குற்றச்சாட்டுகள் நல்லதல்ல. தமிழக அரசியல் சூழலில் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தைப் நிரப்ப பொருத்தமான தலைவராக ஸ்டாலின் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த ஒரு ஆண்டில் ஸ்டாலின் செயல்பாடுகள் எப்படி இருந்தன என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். Savukku © 2018. All Rights Reserved

June 02, 2018 at 10:26PM via Facebook

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...