Sunday, December 06, 2015

Don Ashok


Source:
Don Ashok
http://ift.tt/1m3O4N8
அவர்கள் கருணாநிதிக்காக வந்தார்கள் நான் கருணாநிதி இல்லை; அவர்கள் வைகோவுக்காக வந்தார்கள் நான் வைகோ இல்லை; அவர்கள் ராமதாசுக்காக வந்தார்கள் நான் ராமதாசு இல்லை; அவர்கள் சசிபெருமாளுக்காக வந்தார்கள் நான் சசிபெருமாள் இல்லை; அவர்கள் கோவனுக்காக வந்தார்கள் நான் கோவன் இல்லை; இன்று எனக்காக வந்திருக்கிறார்கள் கேட்க நாதி இல்லை! எப்போதுமே மக்கள் தங்கள் தனிப்பட்ட உடமைகளுக்கு ஆபத்து என்கிறபோதுதான் பொங்கி எழுவார்கள். இதோ நத்தம் விஸ்வநாதனை காரில் இருந்து இழுத்து நீரில் தள்ளிவிட்டிருக்கிறார்கள். ஒன்று ஒரேடியாக அடங்கி இருப்பது அல்லது போட்டு அடிப்பது! மக்களுக்கும், கடவுளுக்கும் என்றுமே இந்தியாவில் மதிப்பு கிடையாது. கடவுளின் மதிப்பு உண்டியல் காணிக்கையோடு முடிந்துவிடும். மக்களின் மதிப்பு ஓட்டுக்கு வாங்கும் பணத்தோடு முடிந்துவிடும். நம் வாக்கின் விலை 500ரூபாய் என்றிருக்கும் போது நமக்கு எப்படி மதிப்பிருக்கும்? நமது உயிர் என்பது 500ரூபாய் பெருமானமுள்ள ஒரு வாக்கு, அவ்வளவுதான்!! அதனால்தான் வெள்ளத்தைப் பார்வையிட வந்தாலும் "மக்களே" என அழைக்காமல் "வாக்காளர்களே" என நாக்கூசாமல் அழைக்க முடிகிறது. என்றாவது நமது வாக்கை "இவர்கள் இது இது செய்தார்கள். அதனால் இவர்களுக்கு ஓட்டு போடுவோம்," என போட்டிருக்கிறோமா? அந்த காலத்தையெல்லாம் காமராசர், அண்ணா காலத்தோடு மறந்துவிட்டோம். சினிமா முகத்துக்காக மாய்ந்து மாய்ந்து ஓட்டு போட்டோம். இல்லாதுபோனால் காசுக்காக போட்டோம், இலவசங்களுக்காக போட்டோம்! நற்பணிக்காக, நல்லாட்சிக்காக கடைசியாக எப்போது வாக்களித்தோம்? ராஜீவ்வை யாரோ கொன்றால் யார் மீதோ கோபப்பட்டு யாரது நல்லாட்சியையோ மறந்து, மண்டல் கமிஷனை மறந்து, விபி.சிங்கை மறந்து, திமுகவை மறந்து யாருக்கோ ஓட்டு போட்டோம். சரி. 1996-2001 வரை இருந்த திமுக ஆட்சியை எதற்காக மாற்றினோம்? அந்த ஆட்சியை பொற்காலம் என திமுகவின் எதிரிகளே புகழ்ந்தபோதும் அதை ஏன் மாற்றினோம்? நமக்கு மாற்றம் என்பது விளையாட்டு. மாறி மாறி விளையாடவேண்டும். இப்படித்தானே இன்றுவரை விளையாடிக் கொண்டிருக்கிறோம். தொடர்ந்து நல்லாட்சி கொடுத்த திமுகவுக்கு கூட்டணியின் முக்கியத்துவம், பணத்தின் முக்கியப்பங்கு, இலவசங்கள் தருவது என தவறான பாடங்களை புகட்டினோம். சாதி ஒற்றுமைக்காகப் பாடுபட்டு, தன் கட்சியின் முதலாவது அமைச்சரை தலித்தாக தேர்ந்தெடுத்த ராமதாசுக்கு உரிய இடத்தை அளிக்காமல் பாமக என்னும் சமத்துவ இயக்கத்தை இன்று சாதி இயக்கமாக மாற்றியிருக்கிறோம். ராஜ்யசபாவில் தமிழர்களுக்காக முழங்கிய வைகோவை அவர் தொகுதியிலேயே கூட தோற்கடித்து போயசுக்கும், கோபாலபுரத்துக்கும் மாறி மாறி கையேந்த அனுப்பினோம். மிகவும் சிறப்பாக ஒவ்வொரு வார்டு பற்றிய தகவல்களையும் நுனிவிரலில் வைத்திருந்த மா.சுப்பிரமணியனை ஏன் மேயர் பதவியில் இருந்து மாற்றி மைக்கைப் பார்த்தாலே தெறித்து ஓடும் சைதை துரைசாமியை அமரவைத்தோம்? எதைத்தான் சரியாகச் செய்தோம் நாம்? இன்று நத்தம் விஸ்வநாதனை காருக்குள் இருந்து நீருக்குள் தள்ளினால் எல்லாம் சரியாகிவிடுமா? கேட்க வேண்டிய நேரத்தில் கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்காமல், படவேண்டிய நேரத்தில் படவேண்டிய கோபத்தைப் படாமல் பாவம் அவரிடம் காட்டி என்ன புண்ணியம்? நத்தம் இன்னும் நான்கு முறை டிவியில் வந்தால் அவர் பதவி போய்விடும். சைதை துரைசாமி மைக்கை பிடித்து இரண்டு முறை பதில் சொன்னால் அவர் பதவி போய்விடும். இதுதான் இன்றைய நிலை. ஒரு அலுவலகத்தில் அடிமட்ட ஊழியர் ஒருவரை நீக்கவேண்டுமானால் கூட காரணம் சொல்லவேண்டும். அமைச்சர்களை, அதாவது மக்கள் பிரதிநிதிகளை காரணமே சொல்லாமல் வாரம் ஒருமுறை ஒரு முதல்வர் மாற்றியபோதெல்லாம் அதை நகைச்சுவையாகவும், ஹீரோயிசமாகவும் பார்க்காமல் ஊடகங்களோ, மக்களோ காரணத்தைக் கேட்டிருந்தால் இன்று நத்தம் விஸ்வநாதனிடம் கோபப்பட நமக்கு உரிமை உண்டு. இன்றைய நிலையில் நமக்கு இருக்கும் உரிமைகள், அதிகாரம் கூட அவருக்கு இல்லை என்பதுதான் உச்சக்கட்ட பரிதாபம். அதிகாரம் ஓரிடத்தில் குவியும் போது இப்படித்தான் ஆகும். நாஜிப்படை அவ்வளவு படைபலத்துடன் இருந்தும் தோற்றது எல்லா அதிகாரமும் இட்லரிடம் குவிந்திருந்ததும், கமாண்டர்கள் தன்னிச்சையாக எந்த முடிவும் எடுக்க முடியாததாலும் தான். இன்றைய சென்னைக்கும் இது பொருந்தும். அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் அவருக்கு இருக்கும் அதிகாரம் இருந்தால்தான் அரசு இயந்திரம் என்பது சீராக இயங்கும். இல்லையென்றால் துருப்பிடித்த இயந்திரம் தான் அது. இன்று சென்னையைக் காப்பாற்றிக் கொண்டிருப்பது மத்திய அரசும், தன்னார்வ இளைஞர்களும், ராணுவமும் தான். ஈகோவை விட்டுத்தள்ளி சென்ற வாரமே வானிலை அறிக்கையின் எச்சரிக்கையை மதித்து ராணுவத்தின் உதவியை நாடியிருந்தால் எவ்வளவோ உயிர்கள், சேதங்கள் காப்பாற்றப்பட்டிருக்கும். ஏதோ இந்தியா என்ற நாட்டின் கீழ் ஒரு மாநில அரசாக இருப்பதால் இவ்வளவாவது நமக்கு நல்லது நடக்கிறது. ஆயிரம் தான் வேறுபாடுகள் இருந்தாலும் இந்தியாவுக்கு நன்றி. மயான வைராக்கியம் என்று ஒன்று உண்டு. சுடுகாட்டில், கல்லறையில் உறவினர்களுக்கு இறுதி மரியாதை செலுத்தும்பொழுது , "என்ன வாழ்க்கையடா, இனிமேலாவது சரியாக இருப்போம்," என்று பெரும்பாலும் நினைப்பார்கள். வீடு வந்து சேருவதற்குள் அந்த வைராக்கியம் கரைந்துவிடும். பேரிடர் வரும்போதுதான் மனிதாபிமானம் என்பது மனிதர்களிடம் இருக்கிறது என்பதே தெரிகிறது. இந்த மனிதாபிமானத்தை , மயான வைராக்கியமாக மறந்துவிடாமல், சென்னையும் அதனைச்சார்ந்த தமிழ்நாடும் மனிதத்திற்கான நகரம், மனிதாபிமானத்தின் சின்னம் என்பதையும் அன்றாட வாழ்விலும் அரசியலிலும் தொடர்ந்து காட்டுவோம். அரசும், கட்சிகளும் மக்களின் ஊழியர்கள். மக்கள் தான் எஜமானர்கள் என்பதை இனிவரும் தேர்தல்களிலும், அரசியலிலும் காட்டுவோம். -டான் அசோக்

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...