Thursday, September 30, 2010

சர்ச்சைக்குரிய அயோத்தி இடத்தை 3 பிரிவாக பிரிக்க வேண்டும் : அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு

 அலகாபாத் : அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தை 3 ஆக பிரிக்க வேண்டும் என்று அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் யாருக்கு சொந்தம் என்பது குறித்து கடந்த 60 ஆண்டுகாலமாக வழக்கு நடந்து வந்தது. வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது. ஐகோர்ட் நீதிபதிகள் எஸ்.யு.கான், சுதிர் அகர்வால், டி.வி.சர்மா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று மாலை தனது தீர்ப்பை வழங்கியது.

இத்தீர்ப்பின் படி, சர்ச்சைக்குரிய நிலம், 3 பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. மூன்றில் ஒரு பகுதி ராம்லல்லாவுக்கும், ஒரு பகுதி வக்பு வாரியத்துக்கும், ஒரு பகுதி நிர்மோகி அகாராவுக்கும் வழங்கப்படுகிறது. சர்ச்சைக்குரிய இடத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள ராமர் சிலை அகற்றப்படாது என்றும், அங்கு தற்போதைய நிலையே மேலும் 3 மாதங்களுக்கு தொடரும் என்றும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் தெரிவித்துள்ளனர்.

வக்பு வாரியம் ஏற்பு : அலகாபாத் ஐகோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ள வக்பு வாரியம், இதனடிப்படையில், சுப்ரீம் கோர்ட்டில்  மேல்முறையீடு  செய்யப்போவதாக  தெரிவித்துள்ளது. , வெற்றியுமில்லை, யாருக்கும் தோல்வியுமில்லை என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார். விஸ்வ இந்து பரிஷத் பொதுசெயலர் பிரவீண் தொகாடியா நீதித்துறை மீது இநதுக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிரூபணமானது என கூறியுள்ளார்,

ஆர்.எஸ்.எஸ்., கருத்து: அயோத்தி வழக்கில் இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு யாருக்கும் வெற்றியல்ல தோல்வியுமல்ல என்று ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார்.

விஷ்வ இந்து பரிஷத் கருத்து: அயோத்தி வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கிய தீர்ப்புக்கு விஷ்வ இந்து பரிஷத் வரவேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து பரிஷத் பொதுச்செயலாளர் பிரவீண் தொகாடியா கூறுகையில், நீதித்துறையின் மீது இந்துக்கள் வைத்துள்ள நம்பிக்கை இத்தீர்ப்பின் மூலம் நிரூபணமாகியுள்ளது என்று தெரிவித்தார்.

காங்கிரஸ் வரவேற்பு: தீர்ப்பு குறித்து காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் ஜனார்த்தன் பூஜாரி கூறுகையில், சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான பிரச்னை பேச்சுவார்த்தையின் மூலம் தீர்க்கப்படவேண்டும் அல்லது கோர்ட் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதன் மூலம் தீர்க்கப்படவேண்டும் என்பதே காங்., கட்சியின் நிலை. தற்போது தீர்ப்பு வெளிவந்துள்ளது. அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

உ.பி., முதல்வர் மாயாவதி: அயோத்தி தீர்ப்பு வெளியானதையொட்டி, மக்கள் அமைதியையும், சமூக நல்லிணக்கத்தையும் பாதுகாக்க வேண்டும் என உ.பி., முதல்வர் மாயாவதி தெரிவித்துள்ளார்.

நரேந்திர மோடி கருத்து: அயோத்தி தீர்ப்பு யாருக்கும் வெற்றியுமல்ல தோல்வியுமல்ல என குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இத்தீர்ப்பின் மூலம் நாட்டு மக்கள் ஒன்றுபட வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இத்தீர்ப்பு யாருக்கும் வெற்றியுமல்ல தோல்வியுமல்ல என தெரிவித்தார்.

தீவிர பாதுகாப்பு: தீர்ப்பை ஒட்டி அலகாபாத் ஐகோர்ட் வளாகத்தில் உச்சகட்ட உஷார் நிலை அமல் படுத்தப்பட்டிருந்தது. கோர்ட்டுக்குள் வழக்கில் சம்பந்தப்பட்ட இருதரப்பினரை தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. அவர்களும் ஒரு முறை கோர்ட்டுக்குள் சென்று விட்டால், தீர்ப்பு முழுமையாக வாசிக்கப்பட்ட பிறகு தான் வெளியே வர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. பத்திரிகையாளர்களுக்கு தீர்ப்பின் பிரதிகள் லக்னோ மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த கூடத்தில் வழங்கப்பட்டது.

முன்னதாக நிருபர்களிடம் பேசிய லக்னோ கலெக்டர் சுனில் அகர்வால், 3 நீதிபதிகளும் தனித்தனியாக தீர்ப்பு வழங்கியிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் பத்திரிகையாளர்கள் தீர்ப்பு குறித்த தகவல்களை வெளியிடும் போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என லக்னோ கலெக்டர் மற்றும் போலீஸ் டி.ஐ.ஜி., வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

அமைச்சரவை கூட்டம்: இதற்கிடையில் டில்லியில் இன்று மாலை 5 மணிக்கு பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை கூட்டம் நடந்தது. தொடர்ந்து அனைவரும் காங்கிரஸ் தலைவர் சோனியா இல்லத்தில் இதுகுறித்து ஆலோசித்து வருகின்றனர்.

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...