Thursday, March 09, 2017

போலீஸ், லேடி ஜர்னலிஸ்ட்களுக்கு இவர் கெட்ட சிவாதான்! - ’மொட்ட சிவா கெட்ட சிவா’ படம் எப்படி? ​தமிழகத்தில் 23765வது சூப்பர் ஸ்டாராக உருவெடுக்க விருப்பப்பட்டு, மக்கள் சூப்பர் ஸ்டாராக ராகவா லாரன்ஸ் அவதாரமெடுத்திருக்கும் படம் மொட்டசிவா கெட்டசிவா. குழந்தைகள், மாணவர்கள், பெண்கள், காவல்துறை, மூன்றாம் பாலினத்தவர், இஸ்லாமியர்கள், நாட்டு மக்கள் என்று அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி நல்ல பெயர் எடுக்க விழைந்திருக்கும் ராகவா லாரன்ஸின் மொ.சி.கெ.சி எப்படி இருக்கிறது? மொட்டசிவா கெட்டசிவா ஏதோ ஒரு காட்டில், ஒழுங்காக வேலை பார்த்துக் கொண்டிருக்கும் ராகவாவுக்கு, சென்னைக்கு மாற்றலாக ஆசை. காட்டில் மாட்டிக்கொள்ளும் அமைச்சரைக் காப்பாற்றி அவர்மூலம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொள்கிறார். அங்கே போய் சமூக சேவை செய்யப்போகிறார் என்றால், கமிஷனராக இருக்கும் சத்யராஜைக் கடுப்பேற்றும் விதமாக லஞ்ச, லாவண்ய அராஜகங்களில் ஈடுபட்டு நம்மையும் சேர்த்து எல்லாரையும் படாதபாடு படுத்துகிறார். நாம்தான் டிக்கெட் வாங்கிக் கொண்டு படத்துக்குப்போனோம்.. சரி... சத்யராஜுக்கு அவர் மேல் அப்படி என்ன கோபம்? ஏன் அவரைக் கடுப்பேற்ற அப்படிச் செய்கிறார் என்பதற்கு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஃப்ளாஷ்பேக் வைத்துக் காட்டி அதற்குப் பிறகு ராகவா திருந்தி, ஏண்டா திருந்தினார் என்று வில்லன் உட்பட உலகத்தோர் அனைவரும் நினைத்து.. ஒரு வழியாக சென்சார் சர்ட்டிஃபிகேட்டில் காட்டியபடி 152வது நிமிடத்தில் படம் முடிய சொர்க்க வாசல் திறந்ததுபோல மக்கள் முண்டியடித்து வெளியேற வைக்கும் திரைக்காவியமே மொசிகெசி. பத்து பச்சை மிளகாயை எடுத்து கரகரவென எனக் கடித்து முழுங்கியது போன்ற ஒரு உணர்வைத் தருவதுதான் மாஸ் கமர்ஷியல் தெலுங்கு படங்களுக்கென உள்ள அக்மார்க் தரம். காரம் பத்தலைனு ஊறுகாயையும் சேர்த்துக் குடிப்பதுபோல சில படங்கள் வரும். 2015ல் அப்படி வெளியான படம் 'பட்டாஸ்'. இந்தப் படத்தின் ரீமேக் தான் லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்திருக்கும் 'மொட்ட சிவா கெட்ட சிவா'. ஒரிஜினலை விட செம காட்டமாக எடுத்திருக்கிறார் இயக்குநர் சாய்ரமணி. டைட்டிலிலேயே கிலிகூட்டுகிற படம், இறுதிவரை டெம்போ மாறாமல் தெளிய வைக்கவே இடமின்றி அடிக்கிறது. தமிழ்நாடே என் கையில் என்று பால்கனியில் வந்து நிற்கும் வில்லன் அசுதோஷ் ராணா கீழே கூடியிருக்கும் மக்களைப் பார்த்து கைகாட்டுகிறார். ‘செல்லம்மா’ தீபா வீட்டில்கூட இதைவிட அதிக கூட்டம் இருக்குமே பாஸ்?’ என்று கேள்வி கேட்கலாம் என்று பார்த்தால், ‘இதெல்லாம் ஜுஜுபி இனிமே வர்றதெல்லாம் பாருங்க’ என்று இறங்கி அடித்திருக்கிறார்கள். முன்பைவிட மிக உக்கிரமாக இறங்கியிருக்கிறார் லாரன்ஸ். அதுவும் மக்கள் சூப்பர்ஸ்டாராக டைட்டில் கார்டில் துவங்கி படம் முழுக்க வெறித்தனம். ஹை டெசிபலில் கத்தி வில்லனிடம் வசனம் பேசுவது, ஃபைட்டர்களை பறக்கவிடுவது, துப்பாக்கியாலேயே சுவற்றில் அசோக சின்னத்தை வரைவது என பல திறமைகளைக் காட்டியிருக்கிறார் மக்கள் சூப்பர்ஸ்டார். எங்கயோ போயிட்டீங்க சார்! நிக்கி கல்ராணி நிக்கி கல்ராணி கதாநாயகி! கவர்ச்சியான ஹீரோயின் ஒரு கமர்ஷியல் படத்துக்குத் தேவை தான். ஒரு லேடி ஜர்னலிஸ்ட் என்று காண்பித்ததெல்லாம் ஓகே.. எப்போதுமே கவர்ச்சியாகவேவா சுற்றுகிற மாதிரியா காட்டுவது? லட்சுமிராயுடன் ஒரு பாட்டுக்கு ஆடினால், ஹீரோயின் பொஸசிவ் ஆகி காதலிக்க ஆரம்பித்துவிடுவார் என்கிற லாஜிக்கைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு இன்னும் நாம் முதிர்ச்சி அடையவில்லை என்பது வருத்தமளிக்கிறது. இன்னும் எத்தனை படங்களில் இந்தப் பொஸசிவ் பூச்சாண்டியைக் காட்டி பெண்களைக் கேவலப்படுத்தப்போகிறார்கள் என்று தெரியவில்லை. போலீஸ் ஜீப் நிற்காமல் போய்க்கொண்டே இருப்பதுபோல, ஜான் மகேந்திரன், சாய்ரமணி கூட்டணி வசனங்களில் ஃபுல் ஸ்டாப் என்ற ஒன்றை மறந்து எழுதியிருக்கிறார்கள். படத்தின் வசனங்கள் ஒவ்வொன்றும் ஒரு கிலோமீட்டர் நீளத்துக்கு இருக்கிறது. இதெல்லாம் எதிர்பார்த்ததுதான், பொறுத்துக் கொள்ளலாம். "இன்னிக்கி செத்தா நாளைக்கு பால் இது பழமொழி, நாங்களே கொன்னுட்டு நாங்களே பால் ஊத்துவோம் இது புதுமொழி" இது போன்ற பல எதிர்பார்க்காத அதிர்ச்சிகள் எல்லாம் இருக்கிறது. "அப்பா... இவனுங்கள என்னை ரேப் பண்ணியாவது கொல்லச் சொல்லுங்கப்பா!" என ஒரு வசனத்தை காமெடி என்ற பெயரில் எழுதியிருக்கிறார்கள். படம் ஆரம்பிக்கும்போது வரும் இந்த வசனமெல்லாம் குரூரத்தின் உச்சம். படத்தின் முதல்பாதியில், வன்முறை என்கிற கேட்டகிரியில் என்னென்ன சப் கேட்டகிரி உண்டோ எல்லாமும் நடக்கிறது. கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் எக்செட்ரா எக்செட்ரா. தெலுங்கு பட ரீமேக் என்றால் மூஞ்சிகூட தெலுங்குக்காரர் மாதிரி இருக்கணுமா என்ன? சத்யராஜ் முதற்கொண்டு அப்படியான கெட் அப்பில் இருக்கிறார்கள். சத்யராஜின் டயலாக் மாடுலேஷன் ஒன்றுதான் ஆறுதல் என்று பார்த்தால், அவரையும் படுத்தி எடுக்கிறார்கள். இளைஞர்களின் ஆதர்சம் ராகவா, விரல்களில் சிகரெட்டோடுதான் அறிமுகமே ஆகிறார். ஏ.சி.பியாக இருக்கும் அவர் ப்ரஸ் மீட் முதற்கொண்டு எதிலும் யூனிஃபார்ம் இல்லாமலே திரிகிறார். அப்படியே போட்டுக் கொண்டாலும் முதல் மூன்று பட்டன்களைத் திறந்துவிட்டுக் கொள்கிறார். நிக்கி கல்ராணி கொஞ்சம் காற்றடித்தால் அவிழ்ந்து விடும் காஸ்ட்யூமில் ஆல் டைம் தொப்புளைக் காட்டிக்கொண்டு வலம் வருகிறார். பெரும்பாலும் எல்லா காட்சிகளிலும் அடிதடி, ரத்தம். படத்துக்கு மட்டும் யு சர்ட்டிஃபிகேட். அரை அடி தள்ளி நின்றிருந்தாலும், ஆறு கிலோமீட்டர் தள்ளி இருக்கிற ரேஞ்சில் கத்தியேதான் பேசுகிறார்கள். கூடவே பி.ஜி.எம் வேறு ஒலிக்கிறது. ஒரு காட்சியில் வசனம் மட்டும் கேட்கிறது. ‘அப்பாடா’ என்று ஆசுவாசமாக இருந்தால் உடனே ராகவா லாரன்ஸ் 'பேக் ரவுண்ட் மூசிக் எங்கடா?’ என்று அதற்கும் ஆப்பு வைக்கிறார். ‘என்னடா வில்லன் இந்தக் கத்து கத்தறாரு’ என்று நினைத்தால் ராகவா லாரன்ஸ் அதைவிட அதிகமாகக் கத்துகிறார். ஒரு காட்சியில் வில்லன் கூட்டமே கத்தி, அருவாளையெல்லாம் கீழே போட்டுவிடுகிறது. டைரக்டர் உட்பட எல்லாருமே, திருந்தித்தான் அடியாட்கள் ஆயுதங்களைப் போட்டுவிடுகிறார்கள் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் ராகவா லாரன்ஸ் கத்திய கத்தல் சகிக்காமல்தான் போட்டார்கள் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? சிவா திருந்தியதும் ஒரு ஃபைட் சீன். ரிக்‌ஷா, தள்ளுவண்டி, கார் என்று சுற்றியிருக்கும் எல்லாவற்றையும் உடைத்து அங்கிருக்கும் டிரான்ஸ்பார்மரையும் துவம்சம் செய்துவிடுகிறார். இதுக்கு நீங்க மாமுல் வாங்கிட்டு இருந்தா இத்தனை சேதாரமே இருந்திருக்காதே சார் என்கிற ரேஞ்சில்தான் இருக்கும். ஃப்ளாஷ்பேக் என்ற ஒன்றைக் காட்டுகிறார்கள். அதைப்பார்த்து சத்யராஜ் மீதோ, சுகன்யா மீதோ, சிறுவயது ராகவா லாரன்ஸ் மீதோ பரிதாபம் வரவேண்டும். ஆனால், ‘எப்படி வந்து சிக்கிருக்கோம் பாரு’ என்று நமக்கு நம் மீதே பரிதாபம் வருகிறது. ராகவா லாரன்ஸ் ஏ.சி.பியான ராகவா லாரன்ஸ் யார், எவர் என்பது போலீஸ் கமிஷனர் சத்யராஜுக்குத் தெரியவில்லை. ஆனால் வில்லனுக்குத் தெரிகிறது. இப்படி ஆரம்பித்து லாஜிக் மீறல்களையெல்லாம் சொல்லலாம். ‘அடப் போங்க பாஸு.. இந்தப் படத்துல லாஜிக் வேற’ என்று மனசாட்சி சிரிப்பதால் விட்டுவிடலாம். கோவை சரளா, சதீஷ், சாம் என போலீஸ்காரர்களை வைத்து போலீஸ், காமெடியன்ஸ் என்று எல்லாவரையும் கேவலப்படுத்தியிருக்கிறார்கள். டைட்டிலில்கூட ஒவ்வொரு பெயருக்கும் போலீஸ் எம்ப்ளம் போடுகிறார்கள். இப்படியான படத்தில், போலீஸ் பெருமைப்படும் ஒரு காட்சியாவது இருக்கிறதா என்று சல்லடை போட்டுதான் தேடவேண்டும். நேரடியாக, மறைமுகமாக என்று எல்லாமே போலீஸின் அராஜகத்தைத்தான் காட்டுகிறார்கள். கமிஷனர், வில்லன் எல்லாருமே டிவி பார்த்துதான் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரிந்து கொள்கிறார்கள். போலீஸான கோவை சரளா, நியூஸ் வாசிக்கிற ரேஞ்சில் பேசுகிறார். படம் ஆரம்பத்தில், 'மக்கள் சூப்பர் ஸ்டார்' பட்டம்; இடைவேளையின்போது எம்.ஜி.ஆர் சிலை பேக்கிரவுண்டில் நின்று பேசும் வீர வசனம்; எம்.ஜி.ஆர் பெயர் பொறித்த இடத்தில் ஃபைட் சீன்; இடைவேளைக்குப் பிறகு எம்.ஜி.ஆரின் ஹிட் லிஸ்ட் பாடலில் இருக்கும், "ஆடலுடன் பாடலை கேட்டு...' பாடலின் ரீமிக்ஸ் என்று பயணித்து அந்தப் பாடல் முடிந்ததும் பெரிய கும்பிடு போட்டு ‘எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுவோம்’ என்று போடுகிறார்கள். நமக்குத்தான், ‘காஞ்சனாவில் ரஜினி ப்ளோ அப் வைத்துக் கொண்டு ஆடினார். இதில் எம்.ஜி.ஆர் ப்ளோ அப்.. என்ன சொல்ல வர்றார்?’ என்று மண்டை குடைகிறது. டீசரில் "கூட்டி கழிச்சு பாரு கணக்கு கரெக்டா வரும் என்பது அண்ணே மொழி... எவ்வளவுதான் கூட்டினாலும் எவ்வளவு தான் கழிச்சாலும் கணக்குலயே வரமாட்டேன் என்பது தம்பி மொழி..." என ராகவா லாரன்ஸ் ஹைபிட்சில் சொல்லிக்கொண்டிருக்க.. வில்லன், 'புரியலயே..." என்று கேட்கும்போது... "சொல்லுற எனக்கே புரியலைன்னா... உனக்கு எப்படிடா புரியும்?" என்று பதில் சொல்வார் லாரன்ஸ். அப்படி படம் முடித்து வெளியே வரும் நமக்கும் இதே கதிதான். படத்தில் தன்னை எதிர்ப்பவர்களையெல்லாம் ‘801’ என்றொரு ஆம்புலன்ஸில் கூட்டிக்கொண்டு போய் வெளுத்து வாங்குவார் லாரன்ஸ். படம் முடித்து எல்லோரும் வெளியே வந்து திரும்பிப் பார்த்தால், தியேட்டரே கிராஃபிக்ஸில் அந்த ஆம்புலன்ஸாகக் காட்சியளிக்கிறது.

March 09, 2017 at 07:23PM via Facebook

No comments:

Madurai Time zone

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...